மதுரை அரசு மருத்துவ கல்லுாரியில் விற்கப்படும் 'ரெம்டெசிவிர்' மருந்து பெட்டிகளை குப்பைத்தொட்டிக்குள் வைத்து கள்ளச்சந்தையில் விற்க முயன்ற ஒப்பந்த பணியாளர் பிருத்வியை தனியார் நிறுவனம் பணிநீக்கம் செய்தது.
அரசின் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் மூலம் தினம் 500 ரெம்டெசிவிர் குப்பிகள் மருத்துவக் கல்லுாரி விற்பனை மையத்துக்கு வழங்கப்படுகிறது. தனிநபருக்கு 6 குப்பிகள் வரை விற்கலாம். 6 குப்பிகள் விலை ரூ.9408. வெளியில் ரூ.50ஆயிரத்துக்கு வாங்க தயாராக உள்ளனர். பற்றாக்குறையால் நோயாளிகளின் உறவினர்கள் பலமணி நேரம் காத்திருந்து டோக்கன் பெற்று மருந்துகளை வாங்கிச் செல்கின்றனர்.
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மட்டுமே விற்பனை நடக்கிறது. மதுரையைச் சுற்றியுள்ள தென்மாவட்ட நோயாளிகளுக்காக அவர்களது உறவினர்கள் முதல்நாளே வந்து காத்திருந்து வாங்கிச் செல்கின்றனர்.இங்குள்ள ஒப்பந்த பணியாளர் பிருத்வி, கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு மருந்துகளை விற்க திட்டமிட்டு, மருந்து பெட்டிகளை குப்பை போல குப்பைத் தொட்டியில் போட்டு வெளியே கடத்த முயன்றார்.
மருந்து வாங்க வந்தவர் இதை வீடியோவாக வெளியிட்டார். இந்த ஊழியர் தனியார் நிறுவனத்தின் கீழ் பணிபுரியும் ஒப்பந்த பணியாளர் என்பதால் அந்நிறுவனம் அவரை பணிநீக்கம் செய்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக