ஆவடி அருகே திருமுல்லைவாயிலில் கரோனா பரிசோதனை செய்வதுபோல் நடித்து, போலீஸ்காரர் மனைவிக்கு மயக்க மருந்து அளித்து, 5.5 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் திருடிய மர்ம நபர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருமுல்லைவாயில், சத்தியமூர்த்தி நகர் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் தர்மராஜ்(27). இவர், ஆவடியில் உள்ள தமிழ்நாடுசிறப்பு காவல்படை 3-ம் அணியில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.
தர்மராஜின் மனைவி சந்திரலேகா(24). இத்தம்பதிக்கு மதியழகன்(4) என்ற மகன் உள்ள நிலையில், தற்போது சந்திரலேகா 6 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
மயக்கமடைந்த பெண்
இச்சூழலில், வழக்கம்போல் நேற்று மாலை தர்மராஜ் பணிக்குச் சென்றபோது, மகன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில், முகக்கவசம் உள்ளிட்டகரோனா தடுப்பு உபகரணங்களோடு அங்கு வந்த இருவர், சந்திரலேகாவிடம் தங்களை சுகாதாரப் பணியாளர்கள் என அறிமுகப்படுத்திக் கொண்டு, கரோனா பரிசோதனை செய்யவேண்டும் எனக் கூறியுள்ளனர்.
இதை நம்பிய சந்திரலேகா, பரிசோதனை செய்ய ஒத்துழைத்த போது, அந்த நபர்கள் மூக்கில் பரிசோதனைக்கான சளி மாதிரியை எடுக்க குச்சியை மூக்கில் நுழைத்ததாக கூறப்படுகிறது. உடனே மயக்க நிலைக்குச் சென்ற சந்திரலேகா கீழே உட்கார்ந்துவிட்டார்.அந்த நபர்கள் வீட்டின் பீரோவில்இருந்த 5.5 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் பணம் ஆகியவற்றை திருடிவிட்டு, தப்பியோடினர்.
இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்துள்ள திருமுல்லைவாயில் போலீஸார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக