மதுரையில் முழு ஊரடங்கில் அத்தியாவசிய தேவையின்றி வருவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்வதோடு அபராதம் விதிக்கப்படும்; வழக்கு பதியப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
கொரோனா 2வது அலை மிக மோசமாக உள்ளது. பலரது உயிர்களை காவு கொண்டிருக்கிறது.தினமும் நுாற்றுக்கணக்கானோர் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். மருத்துவ
மனைகளும், சிறப்பு மையங்களும் நிரம்பி வழிகின்றன. இதை கட்டுப்படுத்த
மே 24 வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
அத்தியாவசிய தேவைகளுக்காக காலை 6:00 மணி முதல் 10:00 மணி வரை காய்கறி, மளிகை, பால் கடைகள் மட்டும் திறக்க அனுமதிக்கப்படுகிறது. இதன் பிறகும் ஏதாவது பொய் காரணங்களை கூறி வாகனங்களில் சென்று வருவது தொடர்கிறது. இதனால் நோய் தொற்று
ஏற்படும் அபாயம் உள்ளது.
இதனால் மதுரை நகரில் 'சும்மா' வருவோரின் டூவீலர்கள் பறிமுதல் செய்வதோடு, வழக்கும் பதியப்படுகிறது. ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது. நேற்றுமுன் தினம் (மே 17) 322 டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.1.61 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. நேற்று 358 டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டு 1.79 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
அதேபோல் மே 8 முதல் நேற்றுமுன்தினம் வரை முகக்கவசம் அணியாத 45,345 பேரிடம் தலா ரூ.200 அபராதம் வசூலிக்கப்பட்டது. சமூக இடைவெளியை பின்பற்றாத 433 பேரிடம் ரூ.2.16
லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
புறநகரில் வாகனங்களில் வந்ததாக நேற்றுமுன்தினம் 4365 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1663 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுவரை 3313 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் நேற்றுமுன்தினம் முகக்கவசம் அணியாததற்காக 5415 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. சமூக இடைவெளியை பின்பற்றாத 370 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
போலீசார் கூறுகையில், ''கொரோனா தொற்றை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்து வருகிறோம். வழக்கில் சிக்கினால் அரசு வேலை, பாஸ்போர்ட் பெறுவதில் சிக்கல் ஏற்படும். இதை தவிர்க்க தேவையின்றி வீட்டை விட்டு வரவேண்டாம். உங்கள் உயிரும், குடும்பத்தினரின் நலனும் முக்கியம் என்பதை உணர்ந்து வீட்டினுள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்'' என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக