Pages - Menu

Pages

இ-அடங்கல் செயலியை பயன்படுத்த வேண்டுகோள்

 விவசாயிகள் இ-அடங்கல் செயலியைப் பயன்படுத்தி பயிர் குறித்த விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று வேளாண்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளின் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது.இங்கு தென்னை, வாழை, மா, கரும்பு, நெல், மக்காச்சோளம், காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து விதமான பயிர்களும் பயிரிடப்படுகிறது.ஒரு பகுதியில் விவசாய நிலங்கள் எவ்வளவு உள்ளது, என்னென்ன பயிர்கள் எவ்வளவு நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ளது உள்ளிட்ட ஆவணங்கள் வருவாய் துறையினரால் பராமரிக்கப்படுகிறது.

இதற்கென ஒவ்வொரு விவசாயி குறித்த விவரங்களும் அடங்கலில் பதிவு செய்யப்படுகிறது.இவ்வாறு பதிவு செய்வதற்கு விவசாயிகள் நேரம் ஒதுக்கி கிராம நிர்வாக அலுவலரிடம் மனு செய்து அடங்கலில் பதிவு செய்ய வேண்டிய நிலை இருந்தது.
  
இதனால் பல விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள பயிர்கள் குறித்த விவரங்களை அடங்கலில் பதிவு செய்வதில் ஆர்வம் காட்டவில்லை.இது அரசின் திட்டங்கள் விவசாயிகளை சென்றடைவதில் இடர்பாடுகளை ஏற்படுத்தும் என்பதை விவசாயிகள் உணரவில்லை.
உதாரணமாக உடுமலை பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படும் நிலையில் பல விவசாயிகளும் இதுகுறித்த விவரங்களை அடங்கலில் பதிவு செய்வதில்லை. இதனால் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்குவதற்காக மிகக்குறைந்த அளவிலேயே சின்ன வெங்காய விதைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இதுபோன்ற சூழலை தவிர்க்கவும் முழுமையான சாகுபடி பரப்பளவை அறிந்து கொள்ளவும் விவசாயிகளே எளிய முறையில் அடங்கலில் பதிவு செய்து கொள்ளும் வகையில் இ-அடங்கல் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து வேளாண்துறையினர் கூறியதாவது:-

வருவாய் கிராமத்தில் உள்ள அனைத்து சர்வே எண்களின் விவரம், நில உரிமையாளர் பெயர், பட்டா எண், நில மதிப்பீடு மற்றும் வேளாண் பயிர்கள் தொடர்பான விவரங்கள் அனைத்தும் இந்த செயலியில் பதிவு செய்யப்பட்டிருக்கும்.



விவசாயிகளே தங்கள் மொபைல் போனிலிருந்து இ-அடங்கல் செயலியை பயன்படுத்தி தங்கள் நில விவரம், பயிர் விவரம் போன்றவற்றைப் பதிவு செய்ய முடியும்.மேலும் ஆன்லைன் மூலமாகவே தங்கள் அடங்கல் சான்றுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு சுமார் 2 ஆண்டுகள் ஆன நிலையிலும் விவசாயிகள் அதிக அளவில் இந்த செயலியைப் பயன்படுத்தவில்லை. தற்போதுள்ள இக்கட்டான சூழலில் உணவு தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் விவசாயப் பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.எனவே இந்த சூழலில் விவசாயிகள் இ-அடங்கல் செயலியைப் பயன்படுத்தி பயிர் விவரங்களைப்பதிவு செய்வது கொள்வதன் மூலம் அரசின் உதவிகள் முழுமையாகக் கிடைக்க வழி கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக