புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-
புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தேவையான ஆக்சிஜன் படுக்கைகள், வெண்டிலேட்டர்கள் இல்லை.
அதற்கான கட்டமைப்பை குறுகிய காலத்தில் உருவாக்காமல் இருந்ததால் பலர் உயிரிழந்துள்ளனர். போர்க்கால அடிப்படையில் வெண்டிலேட்டர், ஆக்சிஜன் படுக்கைகளை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜிப்மரில் குறைந்தபட்சம் 1000 படுக்கைகளும், அதில் 70 சதவீதம் ஆக்சிஜன் படுக்கைகளாகவும், 30 சதவீதம் வெண்டிலேட்டர் படுக்கைகளாகவும் அமைத்தால் தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்.
அதேபோல், இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் 700 ஆக்சிஜன் மற்றும் வெண்டிலேட்டர் படுக்கைகளை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள படுக்கைகளில் 75 சதவீதத்தை மாநில அரசு கையகப்படுத்தி, அதன் மூலம் ஆக்சிஜன், வெண்டிலேட்டர் படுக்கைகளை அதிகரிக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம் புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற முடியும்.
புதுவையில் முழு ஊரடங்கை மாநில அரசு கடுமையாக கடைபிடிக்கவில்லை. 12 மணிக்கு மேல் மக்கள் தாராளமாக வெளியே உலவுகின்றனர். அவர்களை கேட்க ஆளில்லை. ஊரடங்கிலும் மக்கள் நடமாடுவதால் கொரோனா தொற்று குறையவில்லை. எனவே, கடுமையான முறையில் ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.
புதுவையில் அமைப்பு சாரா தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், கூலி தொழிலாளர்கள் உட்பட பல லட்சம் பேர் வேலையில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசு அறிவித்த 5 கிலோ அரிசியை கொடுத்துவிட்டால் மட்டும் போதாது. தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு ரூ.4 ஆயிரம் நிவாரணம் அறிவித்து கொடுக்கிறார். அதேபோல், புதுவையில் வசதியுள்ளவர்கள், அரசு ஊழியர்கள் தவிர்த்து ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
ராஜீவ் காந்தியை கொன்றவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. தற்போது அவர்கள் சிறையில் இருக்கிறார்கள். அவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யலாம் என சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பெருந்தன்மையோடு கூறி உள்ளனர்.
ஆனால், ராஜீவ் காந்தியின் இழப்பு நாட்டிற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் பேரிழப்பு. அவரை கொன்றவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது. அது சில அரசியல் கட்சி மற்றும் பொது நலவாதிகளின் கருத்தாக இருக்கலாம்.
ஆனால், காங், தொண்டன் என்ற முறையில் தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவித்தாக வேண்டும். அவர்களை நாங்கள் மன்னிக்க மாட்டோம். இது மன்னிக்க முடியாத குற்றம். அவர்கள் நீதிமன்ற தீர்ப்பை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு நாராயணசாமி கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக