மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அவனியாபுரம் ரிங் ரோடு பகுதியில் முட்புதருக்குள் எரிந்த நிலையில் இளம்பெண் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் அந்த பெண் சோழவந்தான் பகுதியை சேர்ந்த சகாய ராஜ்-செல்வமேரி தம்பதியினரின் மகள் கிளாடிஸ் ராணி (20) என்பது தெரியவந்தது.
மேலும் அவனியாபுரம் பெரியார் நகரைச் சேர்ந்த ஜோதிமணி என்பவரும் கிளாடிஸ் ராணியும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கிளாடிஸ் ராணி கர்ப்பம் அடைந்ததால் இருவருக்கும் கடந்த 02.08.2021 ம் தேதி பெண் வீட்டார் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணம் முடிந்ததும் இருவரும் கிளாடிஸ் ராணியின் வீட்டிலேயே தங்கியுள்ளனர்.
இந்நிலையில் 4-ம் தேதி வெளியே சென்று வரலாம் என ஜோதிமணி கிளாடிஸ் ராணியை அழைத்து சென்றுள்ளார் .
இருவரும் கிளாடிஸ் ராணியின் பெற்றோர்களிடம் எதுவும் சொல்லாமல் வீட்டிலிருந்து வெளியே கிளம்பி சென்றுள்ளனர். இதனை அடுத்து மீண்டும் ஜோதிமணி மட்டும் தனியாக வீடு திரும்பிய நிலையில் கிளாடிஸ் ராணியை காணவில்லை என கிளாடிஸ் ராணியின் பெற்றோர்களுடன் இணைந்து ஜோதிமணி ஊர்முழுக்க தேடுவது போன்ற நாடகம் ஆடியுள்ளார்.
இதனையடுத்து நான்காம் தேதி மாலை சோழவந்தான் காவல் நிலையத்தில் தனது மகளை காணவில்லை என்று புகார் செய்துள்ளனர். கிளாடிஸ் ராணியின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர் ஜோதிமணி மீது சந்தேகம் அடைந்தனர்.
இந்நிலையில் ஜோதிமணி இடம் விசாரணை மேற்கொண்டதில்., பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன.
போலீஸாரிடம் ஜோதிமணி அளித்த வாக்குமூலத்தில், “கிளாடிஸ் ராணி கடந்த 2ம் தேதி தன்னை சோழவந்தானில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்தார். காதலி அழைத்ததால் நானும் அவரை பார்ப்பதற்காக சென்றேன். வீட்டிற்குள் சென்றதும் ராணியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் என்னைச் சுற்றிவழைத்து ராணி 4 மாத கர்ப்பமாக உள்ளதாகவும் எனவே அவளை கர்ப்பமாக்கிய நீ ராணியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கூறியதை அடுத்து அதிர்ச்சியுற்றேன்.
ராணியின் 4 மாத கர்ப்பத்திற்கு தான் காரணமல்ல எனக் கூறியும் என்னை மிரட்டி எனது பெற்றோருக்கும் தெரிவிக்காமல் கட்டாய திருமணம் செய்து வைத்தனர். இதனால் ராணியின் மீது ஆத்திரத்தில் இருந்தேன். கடந்த 4-ம் தேதி என் வீட்டிற்கு செல்லலாம் எனக் கூறி ராணியின் பெற்றோருக்கும் தெரிவிக்காமல் அழைத்துச்சென்றேன்.
அவனியாபுரம் பைபாஸ் சாலை பகுதியில் உள்ள ஒரு முட்புதருக்குள் வைத்து கிளாடிஸ் ராணியிடம் நீ கர்ப்பமாகியதற்கு நான் தான் காரணம் என பொய் சொல்லி என்னை கட்டாய திருமணம் செய்தது ஏன் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டேன். வாக்குவாதம் முற்றவே ஆத்திரத்தில் ராணியின் கழுத்தை நெரித்து கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டேன். அங்கிருந்து ராணியின் வீட்டிற்கு வந்தேன் அவரது பெற்றோரிடம் ராணியும் நானும் கல்லூரிக்கு சென்றதாகவும் கல்லூரியில் தனது நண்பரை பார்த்து விட்டு வருவதாக கூறிச் சென்றவர் வெகு நேரமாகியும் வரவில்லை எனவும் அவரது செல்போனை தொடர்பு கொண்டபோது செல்போன் அணைத்து வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தேன்.
ராணியின் பெற்றோருடன் சேர்ந்து ராணியை தேடுவது போல் நாடகமாடினேன்” எனப் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து இளம் பெண் காணாமல் போன வழக்கை கொலை வழக்காக மாற்றி இந்த கொலை தனிஆளாக செய்தாரா? அல்லது வேறு நபர்கள் கூட்டாக சேர்ந்து செய்தார்களா? என்பது குறித்து சோழவந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். காதல் திருமணம் செய்து கொண்ட கல்லூரி மாணவி காதலனால் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் சோழவந்தான் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக