Ticker

6/recent/ticker-posts
thumbnail

ஏழைகளின் வஞ்சிரம்

 சாளை மீன்:-
சாளை, மத்தி மற்றும் மொந்தன் என்ற பெயர்களில் அழைக்கப்படும் மீன்களானது இந்திய கடற்பகுதியில் பெருங்கூட்டமாக வாழும் மீனினம் ஆகும். சாளை மீன்கள் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது என்றால் அது மிகையாகாது.
இந்த மீன்கள் தமிழைப் போலவே மலையாளத்திலும் சாளை மற்றும் மத்தி என்றே அழைக்கப்படுகிறது. தெலுங்கில் காவாலு என்றும் பெங்காலியில் கொய்ரா என்றும் அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் Sardine மற்றும் Pilchard என்றும் அழைக்கப்படுகிறது.
வகைகள்:-
சாளை மீன்கள் அவற்றின் உருவ அமைப்பு, வண்ணம் மற்றும் சுவையினை அடிப்படையாக கொண்டு ஒழுகுச்சாளை, பூச்சாளை (தலை முதல் வால்வரை ஒரே அளவாக இருக்கும்), பேச்சாளை (சிறிய வால், எண்ணெய் நாற்றம் உள்ள மீன்), கறுப்புச்சாளை (நச்சாளை), கன்னஞ்சாளை, பறவைச் சாளை (கடலின் மேற்பரப்பில் பறக்கும்), செவிட்டுச் சாளை, மாங்காய்ச்சாளை, கீரிமீன் சாளை, தடிக்கீரிச் சாளை, கொழுவச் சாளை, கொழி சாளை, தொழுவன் சாளை, ஊசிச்சாளை, வட்டச்சாளை (சூடை) மற்றும் மேலாச் சாளை (சாளையில் பெரியது) என வகைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தை பொருத்தவரை கறுப்புச் சாளை, பேச்சாளை, வட்டச் சாளை (சூடை), கீரிமீன் சாளை மற்றும் கொழுவச்சாளைகளே அதிகம் கிடைக்கிறது.
வாழ்விடம் மற்றும் உணவு:-
சாளை மீன்கள் வங்கக்கடல் மற்றும் இந்தியப்பெருங்கடலில் பெருங்கூட்டமாக வாழும் மீனினமாகும்‌. அளவில் சிறிய சாளைகளான கறுப்புச் சாளை, பேச்சாளை, பூச்சாளை மற்றும் கன்னஞ்சாளை போன்றவை கடற்பாசிகளை உணவாக உட்கொண்டு வாழும் மீன்களாகும்.
அளவில் பெரிய சாளைகளான கொழுவச்சாளை சூடைச்சாளை மற்றும் மேலாச்சாளை போன்றவை கடற்பாசிகள் மற்றும் நெத்திலி போன்ற பொடி மீன் கூட்டங்களை வேட்டையாடி உண்ணும் மீன்களாகும்.
சிறப்புகள் :-
சாளை மீன்கள் ஏழைகளின் வஞ்சிரம் என கூறப்படுகிறது. உண்மையில் வஞ்சிர மீனை விடவும் அதிகளவிலான ஆற்றலை நம் உடலிற்கு வழங்கக்கூடியதாகும் சாளை மீன்கள்.
வஞ்சிர மீன்கள் அளவில் பெரியதாகவும் சதைப்பகுதியில் முள் இல்லாமல் இருப்பதும் உயர்வாக கருத்தப்படுவதற்கான காரணமாகும். மேலும் வஞ்சிர மீன்கள் அதிகளவில் பிடிபடாத காரணத்தினாலும் அவற்றின் சந்தை மதிப்பு அதிகம்.
ஆனால் சாளை மீன்கள் அதிகளவில் கிடைக்கும் மீனினம் ஆகும். மேலும் அளவில் சிறியதாகவும் சதைப்பகுதியில் முள் இருப்பதாலும் சாளை மீனின் மதிப்பை அறியாமல் வஞ்சிரத்துடன் ஒப்பிடுகின்றனர். உண்மையில் அதிக செலவழித்து வஞ்சிர மீனை சாப்பிடுவதை விட சாளை மீன்களை சாப்பிடுவது சுவை மற்றும் ஆற்றல் எனும் இரண்டு அடிப்படையிலும் நன்மையானதாகும்.
சாளை மீன்கள் உணவாக மட்டுமல்லாமல் மீன் எண்ணெய் எனும் மருந்து தயாரிக்கவும் பயன்படுகின்றது. இதன் எண்ணெய் தன்மையானது மனித உடலின் பல உறுப்புகளுக்கு பலவகை ஆற்றலை வழங்கக்கூடியதாகும்.
உணவுவகைகள்:-
கேரளம் மற்றும் தமிழகத்தில் இம்மீனைக்கொண்டு அவியல், குழம்பு, பொறிப்பு மற்றும் இரசம் என பலவகை உணவுகளை சமைத்து உண்பதை வழமையாக கொண்டுள்ளனர்.
சாளை மீனை சமைப்பதற்கு முன், செதிலை நீக்கி வயிற்றுப் பகுதியில் குடல் மற்றும் தலையில் உள்ள செவுள் பகுதிகளை எடுத்துவிட்டு நன்னீரில் கழுவி மேற்பகுதியில் இலகுவாக கீறி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அவியல், குழம்பு மற்றும் பொறியல் என அனைத்திற்கும் முழு மீனாகவே பயன்படுத்தலாம்.
சாளை மீன் அவியல்:-
தேவையான பொருட்கள் :-
1. சாளைமீன் - 1/2 கிலோ
2. மாங்காய் - 1
3. தக்காளி - 2
4. சின்ன வெங்காயம் - 10
5. வரமிளகாய் - 5
6. மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
7. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
8. மஞ்சள் தூள் - தேவைக்கேற்ப
9. தேங்காய் - 1/2 மூடி
10. பூண்டு - 4 பல்
11. உப்பு - தேவையான அளவு
செய்முறை :-
துருவிய 1/2 மூடி தேங்காய், பூண்டு, சீரகம், மஞ்சள் தூள் மற்றும் உரித்து வைத்த சின்னவெங்காயம் அனைத்தையும் நன்றாக மைபோல அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் வானலியில் ஊற்றிய எண்ணெய் காய்ந்ததும் வெட்டிய தக்காளி மற்றும் மாங்காய் இவற்றை போட்டு வதக்கவும். தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வந்த பின்னர் அரைத்து வைத்த தேங்காய் கலவை, மல்லித்தூள் மற்றும் மிளகாய்த்தூள் சேர்க்கவும். சில பகுதிகளில் இதனுடன் முருங்கைக்காய் சேர்ப்பதும் உண்டு.
மசாலாவின் பச்சைவாசனை மாற ஆரம்பித்தவுடன் மீனைப்போட்டு மிதமான சூட்டில் நீர் வற்றும் வரை வேக‌ வைக்கவும்.
குறிப்பு :-
மீன் சேர்த்த பின்னர் அடுப்பை கண்டிப்பாக குறைத்து விட வேண்டும். அடிபிடிக்காமல் நீர் வற்றும் வகையில் வெப்பம் இருப்பது அவசியம் இதை மனதில் வைத்தே நீரின் அளவு இருக்க வேண்டும்.
சாளை மீன் குழம்பு:-
தேவையான பொருட்கள்..
1. சாளை மீன் -1/2 கிலோ
2. தக்காளி - 3
3. சின்னவெங்காயம் - 30
4. தேங்காய் - 1/2 மூடி
5. மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
6. மல்லிதூள் - 3 தேக்கரண்டி
7. மஞ்சள்தூள் - 1/2தேக்கரண்டி
8. தாளிக்க தேவையான கடுகு , சி.சீரகம் ,வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை
9. மாங்காய் - 1
10. புளி - நெல்லிக்காய் அளவில்
11. உப்பு - தேவையான அளவு
12. தண்ணீர் - 4 குவளை
13. எண்ணெய் - 4 தேக்கரண்டி
14. பூண்டு - 8 பல்
செய்முறை
1 குவளை நீரில் நெல்லிக்காய் அளவிலான புளியை ஊறவைத்து கரைத்து அதில் 3 தக்காளியை போட்டு நன்றாக பிசைந்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
மண் சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் மற்றும் வெந்தயம் (சிலர் மிளகும் சேர்ப்பதுண்டு) சேர்த்து பொன்னிரத்தில் பொடிய விடவும். அடுத்து கறிவேப்பிலை போட்டு பொடிய விடவும். கறிவேப்பிலை பொன்னிறம் வந்ததும் புளி மற்றும் தக்காளி கரைசலை வானலியில் ஊற்றவும். அதைத்தொடர்ந்து மல்லித்தூள், மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் மூன்றையும் போடவும். தேங்காய், பூண்டு, சீரகம் மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து அரைத்த கலவையுடன் 3 குவளை தண்ணீரை சேர்த்து வானலியில் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கிண்டி விடவும்.
கொதிநிலைக்கு வந்த பின்பு நீளவாக்கில் வெட்டிய மாங்காய் துண்டுகளை அதில் போடவும்‌. ஐந்து நிமையம் கழித்து சுத்தம் செய்து வைத்த மீனை குழம்பில் சேர்த்து அடுப்பை குறைவாக வைக்கவும். நன்றாக கொதி வரும் வரை காத்திருந்து இறக்கினால் சுவையான சாளை மீன் குழம்பு தயார்.


சாளை மீன் பொறிப்பு:-
தேவையான பொருட்கள் :-
சாளை மீன் - 1/2 கிலோ
பூண்டு - 4 பல்
இஞ்சி - சிறிதளவு
மிளகு - சிறிதளவு
மிளகாய் தூள் - 20 கிராம்
மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை :-
பூண்டு, மிளகு, இஞ்சி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் தேவைக்கேற்ப உப்பு என அனைத்தையும் நன்றாக அரைத்து, நன்றாக கழுவி கீறி வைத்துள்ள சாளை மீனில் தேய்த்து அரைமணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் அவரவர் விருப்பத்திற்கேற்ப வானலியில் எண்ணெய் ஊற்றியோ அல்லது தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றியோ பொறிக்கலாம்.
அவியல் மற்றும் குழம்பினை சோறு மற்றும் இட்டலி மற்றும் தோசைக்கு சேர்த்து உண்ணலாம். வடித்து எடுத்து வைத்த பழைய சோற்றுக்கு சாளை மீன் மிகவும் சுவையாக இருக்கும்.
படம் : பேச்சாளை

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About

Ad Code

Responsive Advertisement

Our Artworks

Categories

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's.

Subscribe Us

Popular Posts

Popular Posts

Popular Posts