காரல் மீன்
கடற்பாசிகளை மட்டும் உணவாக உட்கொண்டு வாழும் மீன்களில் பெருங்கூட்டமாக வாழ்பவவை காரல் மீன்களாகும். காரல் மீன்கள் கடலில் வாழும் மிகச்சிறிய மீன் வகைகளுள் ஒன்றாகும். இவற்றின் வெளிப்புறத்தில் செதில் இல்லாமல் உப்புப்படிமம் அதிகம் இருக்கும்.
காரல் என பொதுவாக அழைக்கப்படும் இந்த மீன் வகையானது உருவத்தில் மிகச் சிறியதாக உள்ளதால் பொடி மீன் மற்றும் காரப்பொடி மீன் என்றும் அழைக்கப்படுகிறது. மலையாள நாட்டில் இதை முள்ளான் என அழைக்கின்றனர்.
காரல் மீன்கள் "Pony fish" என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றன. முகம் மட்டக்குதிரையின் (Pony) முகம் போல் இருப்பதால் அவ்வாறு பெயர் வழங்கப்பட்டுள்ளது. சிலர் இதை Silver belly fish என்றும் அழைப்பதுண்டு.
காரல்களில் 9 இனங்களும், 48 வகைகளும் உள்ளதாக கூறப்படுகிறது.
அப்புக்காரல், அமுக்குக்காரல், கலி காரல், பொட்டுக்காரல், நெடுங்காரல் (விளக்கு), மஞ்சள் காரல், மரவுக்காரல், வரிக்காரல், வரவுக்காரல், உருவக்காரல் (குதிப்புக் காரல்), ஊசிக்காரல், ஒருவாக் காரல், பெருமுட்டிக் காரல், கவுட்டைக் காரல், நெய்க்காரல், வட்டக்காரல், கண்ணாடிக் காரல், குழிக்காரல், குல்லிக்காரல், ஓட்டுக்காரல், செவிட்டுக் காரல், சென்னிக்காரல், காணாக்காரல், காணா வரிக்காரல் (வரிக்காரலில் சிறியது), பெருவா காரல், காசிக்காரல், சுதும்பு காரல், சலப்பக் காரல், சலப்ப முள்ளுக்காரல், சளுவக் காரல், சலப்பட்டக் காரல், சிற்றுருவக் காரல் (சித்துருவக் காரல்), பஞ்சக் காரல், தீவட்டிக் காரல், கொம்புக் காரல், நாமக் காரல், பொடிக்காரல் (பூச்சிக் காரல்), பூட்டுக்காரல், முள்ளங்காரல், சுதுப்புனங் காரல், பெருவா காரல், கொடுங்காரல் என மொத்தம் 42 காரல் பெயர்களை தமிழர்கள் வகைபடுத்தியுள்ளனர்.
காரல்களில் ஒளிரும் காரல்களும் உள்ளன. உணவுக்குழாய்களில் உள்ள ஒருவகை பாக்டீரியாவின் காரணமாக காரல்கள் இரவில் ஒளிர்கின்றன. காரல்மீன்களில் மிகப்பெரிய மீனாக பெருமுட்டிக் காரலைக் கூறலாம். இந்த வகை மீன், 8 அங்குலம் முதல் 11 அங்குலம் வரை வளரக்கூடியது.
இந்தியப் பெருங்கடலில் கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து பசிபிக் கடலின் பிஜி தீவுகள் வரை இவை காணப்படுகின்றன. ஆஸ்திரேலியாவில் இருந்து ஜப்பான் வரை இவை நீந்தித் திரிகின்றன.
இவை ஆண்டின் அனைத்து நாட்களிலும் கரைப்பகுதி மற்றும் ஆழ்கடல் பகுதிகளில் வலைவீசி பிடிக்கப்படும் மீனாகும். சிறிய வகை காரல் மீன்கள் கரைப்பகுதிகளிலும் பெரிய வகை காரல் மீன்கள் ஆழ்கடல் பகுதிகளிலும் அதிகமாக காணப்படும்.
காரல் மீன்கள் தாய்மார்களுக்கு பால் ஊறும் அருமருந்தாக பயன்படுகிறது என்றால் மிகையாகாது. இதற்கு சின்ன காரல் மீனைத்தான் பயன்படுத்த வேண்டும், ஏனெனில் சதைப்பற்றுள்ள பெரிய அளவிலான காரல் மீனில் கொழுப்புச்சத்து அதிகமாக இருக்கும் என்பதால் சிறிய அளவிளான காரல் மீன்களை சேர்த்துக்கொள்வதே தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் நல்லது.
தாய்மார்களுக்கான காரல்பொடி மீன் அவியல் செய்வது எப்படி என பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
1. காரல் பொடி மீன் - 1/2 கிலோ
2. தேங்காய் - 1 மூடி
3. சின்ன சீரகம் - 1 தேக்கரண்டி
4. மிளகுதூள் - 1 தேக்கரண்டி
5. பூண்டு - 10 பல்
6. மஞ்சள்தூள் - சிறிதளவு
7. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
காரல் பொடி மீனின் தோலில் உப்புப்படிமம் அதிகமாக இருக்குமென்பதால் இரண்டு அல்லது மூன்று முறை நன்னீர் விட்டு நன்றாக கழுவ வேண்டும். வயிற்றுப்பகுதியில் உள்ள குடல் மற்றும் உணவுக்கழிவுகளை சுத்தம் செய்தால் போதுமானது. காரல் மீனின் முட்கள் கடித்து மென்றுவிடுமளவு இலகுவாகவே இருக்கும் என்பதால் முள் குறித்து பயப்பட தேவையில்லை.
முதலில் தேங்காயை நன்றாக அரைத்துக்கொள்ளவும் பின்னர் அதை ஒரு வானலியில் ஊற்றி, ஒரு குவளை அரைவைக்கு ஒன்றரை குவளை தண்ணீர் ஊற்றி சிறிதளவு மஞ்சள் தூளையும் சேர்த்து ஐந்து நிமையம் வேக விடவும். பின்னர் அரைத்து வைத்த மிளகுப்பொடி, சின்னசீரகம் மற்றும் பூண்டு கலவையை சேர்த்து நன்றாக கிண்டவும்.
கொதி வரத்தொடங்கிய பின்னர் கழுவி வைத்துள்ள காரல்பொடி மீன் மற்றும் உப்பு சேர்த்து பத்து நிமையம் மிதமான வெப்பத்தில் வேகவைத்தால் காரல் மீன் அவியல் தயார். அவரவர் சுவைக்கு ஏற்ப உப்பு மற்றும் மிளகின் அளவை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதை வடித்த சோற்றுடன் சேர்த்து சாப்பிடுவது சுவையாக இருக்கும். இதை சுவைக்காக என்றில்லாமல் உடல் நலனிற்காக அவ்வப்போது உட்கொள்வது நல்லது.
அளவில் பெரிய காரல் மீன்களை மற்ற மீன்களைப் போல் பொறித்தும் சாப்பிடலாம்.
படம் : குதிப்புக்காரல்
செவ்வாய், மே 25, 2021
Tags :
பல்சுவை
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments