வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திர நாள், முருகப் பெருமான் அவதரித்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதனை வேனில் விழா என்றும் கூறுவர்.
முருகன் கோவில்களில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனோ பரவல் காரணமாக வைகாசி விசாக திருவிழா பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்றது. இந்த ஆண்டும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வைகாசி விசாக திருவிழா நடைபெறுமா என்று பக்தர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கோவிலில் பக்தர்கள் வழிபாடு செய்வதற்கு அரசு தடை விதித்துள்ளது. எனவே இன்று(செவ்வாய்க்கிழமை) அனைத்து முருகன் கோவிலில் வைகாசி விசாக விழா எளிமையாக நடைபெறுகிறது.
மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. இதையடுத்து முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கிறார். கொரோனா பரவல் காரணமாக இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை. பூஜைகளில் கோவில் சிவாச்சாரியார்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
விசாகம், வைகாசி, அனிலநாள், சோதிநாள் எனவும்படும். இருபத்தேழு நட்சத்திரங்களில் விசாகமும் ஒன்று. சூரபதுமன் முதலான அசுரர்களின் கொடுமைகளைத் தாங்கலாற்றாத தேவர்கள் சிவபெருமானிடம் சென்று தமது குறைகளை முறையிட்டனர். கருணையங்கடலாகிய சிவபிரான் அசுரர்களுடைய கொடுமைகளினின்று அவர்களைக் காத்தருள விரும்பினார்.
தமது நெற்றிக்கண்ணின்றும் ஆறு தீப்பொறிகளைத் தோற்றுவித்தார். அவ்வாறு பொறிகளும் வாயு, அக்கினி, தேவர்களினால் கங்கையில் கொண்டு விடப்பட்டன. கங்கை சரவணப் பொய்கையில் கொண்டு சேர்த்தது. சரவணப் பூந்தடாகத்திலே ஆறு பொறிகளும் ஆறு திருக்குழந்தைகளாகி விளங்கின. விஷ்ணுமூர்த்தி கார்த்திகை முதலிய கன்னியர்கள் மூலமாக அக்குழந்தைகட்குப் பாலூட்டுவித்தார். ஆறு பொறிகளும் திருக்குழந்தைகளான தினம் வைகாசிமாதத்து விசாகநாள் ஆகும்.
ஆறுமுகப்பெருமான் அவதரித்த தினமாதலின் விசாகம் விசேஷ தினமாகக் கொண்டாடப்படுகின்றது. எனவே, உலகத்து உயிர்கள் யாவும் உய்யும் பொருட்டு எம்பிரானே தந்திருவிளையாடலாற் குழந்தையான நாளாதலின் சைவமக்கள் வழிபாட்டிற்கு இந்நாள் மிகவும் சிறந்ததாகும். இத்தினத்தில் கோயில்களில் வசந்தோற்சவமும், பிரமோற்சவமும் நடைபெறும், இத்தினம் பலசமயத்தாருக்கும் ஒரு புனித நாளாகும்.வைணவத்தில் நம்மாழ்வார் அவதார நாளாகவும் இந்நாள் கொண்டாடப்படுகின்றது. இந்நாளில் திருசெந்தூரில் மிகவும் சிறப்பான வழிபாடு நடக்கும். புத்தன் (சித்தார்த்தன்) அவதரித்ததும்(பிறப்பு) புத்தாரனதும், (திருவருள்) நிருவாணமடைந்ததும்(மறைவு) இதே திதியிற்தான் என்பர்.
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments