கலியுகத்துக்கு காலபைரவர் என்பார்கள். பைரவரை வழிபட்டால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். எம பயம் இருக்காது. திருமணத் தடை அகலும். பைரவர் சனிபகவானுக்கே ஆசிரியராக, குருவாகக் கருதப்படுகிறார். அதனால், சனி பகவானின் இன்னல்கள் குறையப் பெறலாம். எதிரிகள் அழிவர். பில்லி, சூனியம் அகலும். வழக்குகளில் வெற்றி பெறலாம்!
கார்த்திகை வளர்பிறை அஷ்டமி மற்றும் மாதந்தோறும் வருகிற தேய்பிறை அஷ்டமியும் பைரவருக்கு உகந்த நாட்கள். காசி திருத்தலத்தின் காவல் தெய்வமான கால பைரவர் அவதரித்தது கார்த்திகை மாத வளர்பிறை அஷ்டமி நாளில்தான் என்கிறது புராணம். சூலமும், உடுக்கையும், மழுவும், பாசக் கயிறும் கைகளில் ஏந்திய கால பைரவரது வாகனம் நாய்.
வாழ்க்கையில் சந்திக்கும் துன்பங்களால் ஏற்படும் பயம் நீங்க, ஸ்ரீபைரவரை வழிபட வேண்டும். சீர்காழி திருத்தலத்தில் அருளும் ஸ்ரீசட்டநாதரும், திருவெண்காடு தலத்தில் அருளும் ஸ்ரீஅகோரமூர்த்தியும் பைரவ அம்சம் என்பார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் இந்தத் தலங்களுக்குச் சென்று, இந்த தெய்வங்களைத் தரிசித்து வழிபட, அல்லல்கள் நீங்கும்.
நெல்லையப்பர் கோயிலில் அருள் புரியும் பைரவர், ஆறு கரங்களுடன் பல ஆயுதங்கள் தாங்கி, சாந்த முகத்துடன் காட்சி தருகிறார்.
நெல்லை மாவட்டம், குற்றாலம்- செங்கோட்டை சாலையில் உள்ள இலஞ்சி எனும் ஊரில் குமரன் கோயிலில் அருள் புரியும் பைரவரது வாகனமான நாய், இடப் பக்கம் திரும்பி இருப்பது சிறப்பு அம்சம்.
சங்கரன்கோவில் சிவன் கோயிலில், நின்ற திருக்கோலத்தில் செங்குத்தாக பாம்பை கையில் ஏந்திய பைரவரை 'சர்ப்ப பைரவர்' என்கிறார்கள்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் 8 கரங்களுடன் 3 கண்கள் கொண்ட ஐம்பொன்னாலான பைரவரது உற்ஸவர் சிலையை தரிசிக்கலாம்.
காரைக்குடியிலிருந்து சுமார் 20 கி.மீ. தூரத்தில் உள்ள திருப்பத்தூர் சிவாலயத்தில், பைரவர் அமர்ந்த திருக்கோலத்தில் யோக நிலையில் காட்சி தருகிறார். இவரை தேய்பிறை அஷ்டமியில் வணங்கினால், ஞானமும் யோகமும் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்!
தஞ்சை பெரிய கோயிலில் அருள்பாலிக்கும் பைரவர் 8 கரங்களுடன் காட்சி தருகிறார்.
திருவண்ணாமலையில் மேற்கு முகமாக, நின்ற கோலத்தில் 8 கரங்களுடன், 7 அடி உயரத்தில் அருள் பாலிக்கிறார் பைரவர்.
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியில் உள்ள வைத்தியநாத சுவாமி கோயிலில், 8 கரங்களுடன், ஜடாமண்டல கால பைரவர் அருள் புரிகிறார்.
கும்பகோணம்- திருவாரூர் சாலையில் உள்ள சிவபுரம் சிவகுருநாத ஸ்வாமி ஆலயத்தில், நின்ற கோலத்தில் கோரைப் பற்கள் மற்றும் பயங்கர உருவத்துடன், கையில் சூலாயுதம் தாங்கி அருள் புரிகிறார் பைரவர். வாகனமான நாய், இடப் புறம் திரும்பி பைரவரின் முகத்தைப் பார்த்த வண்ணம் உள்ளது.
கும்பகோணம் அருகில் உள்ள திருவிசலூர் தலத்தில் உள்ள சிவயோகநாதர் கோயிலில் ஒரே வரிசையில் நான்கு பைரவர்கள் காட்சி தருகின்றனர்.
சென்னை- திருவான்மியூர் ஸ்ரீமருந்தீஸ்வரர் ஆலயத்தில் ஏழு பைரவர் சந்நிதிகள் உள்ளன.
காளஹஸ்தி கோயிலில் இரண்டு பைரவர்களைத் தரிசிக்கலாம். அவர்களில் ஒருவர், பாதாள பைரவர். கட்டுமானப் பணிகள் துவங்குவதற்கு முன்னதாக இந்த பைரவரை வழிபட்டால், வீடு கட்டும் பணிகள் தடையின்றித் தொடரும் என்பது நம்பிக்கை.
தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவருக்கு வடைமாலை சார்த்தி வழிபடுவது விசேஷம். தேய்பிற அஷ்டமியான இன்று சிவாலயங்களில், காலபைரவர் சந்நிதியில் இன்று மாலையில், சிறப்பு அபிஷேகங்களும் விசேஷ பூஜைகளும் நடைபெறும்.
அவருக்கு தயிர்சாதம் நைவேத்தியமாகப் படைத்து வணங்கினால், வாழ்க்கையே குளிர்ந்துபோகும்! தீயசக்திகளால் ஏற்படும் துன்பங்கள் அனைத்தும் நீங்கும். சத்ரு பயம் அகலும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் காலத்துக்கும் துணை நிற்பார் காலபைரவர்!
திங்கள், மே 24, 2021
Tags :
தமிழ்நாடு
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments