Ticker

6/recent/ticker-posts
thumbnail

 

ஆன்லைன் முலம் அதிகமாக சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி ரூபாய் 92 லட்சம் பண மோசடி செய்த  நபர்கள் கைது.

 

மதுரையைச் சேர்ந்த தொழிலதிபரை ஆன்லைன் வர்த்தகம் செய்து அதிகமாக சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி ரூபாய் 92 லட்சம் பண மோசடி செய்த மூவர் மாநில சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 



மதுரையைச் சேர்ந்த தொழிலதிபரிடம் கடந்த ஜூலை மாதம் பேஸ்புக் மூலமாக நபர் ஒருவர் பழக்கம் ஆகியுள்ளார். அவர் ஆன்லைன் வர்த்தகம் செய்தால் லாபம் பல மடங்கு கிடைக்கும் என கூறியுள்ளார். மேலும், இணையதளம் வாயிலாகவே தாங்கள் ஒரு குழு வைத்திருப்பதாகவும் அதில் பலரும் முதலீடு செய்து ஆன்லைன் வர்த்தகம் செய்து பல மடங்கு லாபம் எடுத்து வருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இதனையடுத்து தொழிலதிபரை ஆன்லைன் வர்த்தக வாட்ஸ் அப் குழுவில் இணைத்து அதில் பல மடங்கு லாபம் பார்ப்பது போல் பொய்யான ஆவணங்களை பதிவிட்டும் வந்துள்ளார்.

இதனை நம்பிய தொழிலதிபர் சுமார் 92 லட்சம் வரை வங்கி கணக்கிற்கு பல தவணைகளாக செலுத்தியுள்ளார். ஆனால், லாபம் ஏதும் வராததால் இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது பதில் எதுவும் தெரிவிக்காமல் வாட்ஸ் அப் குழு கலைக்கப்பட்டுள்ளது.

தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த தொழிலதிபர்  சைபர் கிரைம் போர்ட்டலில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் மாநில சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு பணப்பரிவர்த்தனை நடந்த வங்கி கணக்கை வைத்து விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணையில் அந்த வங்கி கணக்கு நாமக்கல் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த நிதிஷ்குமார் என்பவருடையது என தெரிய வந்தது.

இதனையடுத்து நாமக்கல் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த நிதிஷ்குமார் அவரது நண்பர்களான சந்திரசேகரன் சவுரியார்பாளையம் பகுதியை சேர்ந்த சுரேஷ் ஆகிய மூவரை கைது செய்தனர்.

மேலும், கைது செய்யப்பட்ட நபர்கள் ஆந்திரா, பீகார், குஜராத் ஹரியானா, இமாச்சல்பிரதேசம், கர்நாடகா, கேரளா, மத்தியபிரதோம். பஞ்சாப், ராஜஸ்தான், தெலங்கானா, உத்திரபிரதேசம், மேற்குவங்காளம், நாகலாந்து உள்ளிட்ட பல்வேறு மாநில பணக்காரர்கள் மற்றும் தொழிலதிபர்களிடம் ஆசை வார்த்தை கூறி ஆன்லைன் மூலம் ரூ.3 கோடி வரை பண மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்ததுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் லேப்டாப்புகள் செல்போன்கள் சிம்கார்டுகள் வங்கி ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு, இவர்கள் பின்னணியில் யார் யார் உள்ளார்கள்? என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

thumbnail

100 வார்டுகளுக்கும் 2023க்குள் தடையின்றி குடிநீர்

 மதுரை : மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கும் 2023க்குள் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வதற்கான முல்லை பெரியாறு கூட்டு குடிநீர் திட்டத்தை விரைந்து முடிக்க டெண்டர் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.



தற்போது மாநகராட்சி விரிவாக்கப்பகுதி வார்டுகளில் குடிநீர் வசதி இல்லை. அந்த வார்டுகளில் லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. சில வார்டுகளில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 100 வார்டுகளில் குடிநீர் விநியோக கட்டமைப்புகளை ஏற்படுத்தி வீடுகளுக்கு36 மாதங்களில் குழாய் இணைப்பு கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.



அதோடு 5 ஆண்டுகள் வரை பராமரிக்க மாநகராட்சி டெண்டர் விட்டுள்ளது.நகர் பொறியாளர் அரசு கூறியதாவது: மதுரையில் உள்ளூர், வைகை, காவிரி குடிநீர் திட்டங்களில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் தடையின்றி 100 வார்டுகளுக்கும் குடிநீர் வழங்க முல்லை பெரியாறு கூட்டு குடிநீர் திட்ட பணி நடக்கிறது.



பல வார்டுகளில் பாதாள சாக்கடை பணியோடு குடிநீர் குழாய் பதிக்கும் பணி முடியும் நிலையில் உள்ளது. இப்பணிகளை விரைந்து மேற்கொள்ள டெண்டர் விடப்பட்டுள்ளது என்றார்.

thumbnail

நாடகமாடிய காதல் கணவன் - அதிர்ச்சி வாக்குமூலம்

  மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம்  அவனியாபுரம் ரிங் ரோடு பகுதியில் முட்புதருக்குள் எரிந்த நிலையில் இளம்பெண் சடலம்  இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் அந்த பெண் சோழவந்தான் பகுதியை சேர்ந்த சகாய ராஜ்-செல்வமேரி தம்பதியினரின் மகள் கிளாடிஸ் ராணி (20) என்பது தெரியவந்தது.



மேலும் அவனியாபுரம் பெரியார் நகரைச் சேர்ந்த ஜோதிமணி என்பவரும் கிளாடிஸ் ராணியும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கிளாடிஸ் ராணி கர்ப்பம் அடைந்ததால் இருவருக்கும் கடந்த 02.08.2021 ம் தேதி பெண் வீட்டார் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணம் முடிந்ததும் இருவரும் கிளாடிஸ் ராணியின் வீட்டிலேயே தங்கியுள்ளனர்.
இந்நிலையில் 4-ம் தேதி வெளியே சென்று வரலாம் என ஜோதிமணி கிளாடிஸ் ராணியை அழைத்து சென்றுள்ளார் .

இருவரும் கிளாடிஸ் ராணியின் பெற்றோர்களிடம் எதுவும் சொல்லாமல் வீட்டிலிருந்து வெளியே கிளம்பி சென்றுள்ளனர். இதனை அடுத்து மீண்டும் ஜோதிமணி மட்டும் தனியாக வீடு திரும்பிய நிலையில் கிளாடிஸ் ராணியை காணவில்லை என கிளாடிஸ் ராணியின் பெற்றோர்களுடன் இணைந்து ஜோதிமணி ஊர்முழுக்க தேடுவது போன்ற நாடகம் ஆடியுள்ளார்.
இதனையடுத்து நான்காம் தேதி மாலை சோழவந்தான் காவல் நிலையத்தில் தனது மகளை காணவில்லை என்று புகார் செய்துள்ளனர். கிளாடிஸ் ராணியின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர் ஜோதிமணி மீது சந்தேகம் அடைந்தனர்.
இந்நிலையில் ஜோதிமணி இடம் விசாரணை மேற்கொண்டதில்., பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன.

போலீஸாரிடம் ஜோதிமணி அளித்த வாக்குமூலத்தில், “கிளாடிஸ் ராணி கடந்த 2ம் தேதி தன்னை சோழவந்தானில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்தார். காதலி அழைத்ததால் நானும் அவரை பார்ப்பதற்காக சென்றேன். வீட்டிற்குள் சென்றதும் ராணியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் என்னைச் சுற்றிவழைத்து ராணி 4 மாத கர்ப்பமாக உள்ளதாகவும் எனவே அவளை கர்ப்பமாக்கிய நீ ராணியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கூறியதை அடுத்து அதிர்ச்சியுற்றேன்.

ராணியின் 4 மாத கர்ப்பத்திற்கு தான் காரணமல்ல எனக் கூறியும் என்னை மிரட்டி எனது பெற்றோருக்கும் தெரிவிக்காமல் கட்டாய திருமணம் செய்து வைத்தனர். இதனால்  ராணியின் மீது ஆத்திரத்தில் இருந்தேன். கடந்த 4-ம் தேதி என் வீட்டிற்கு செல்லலாம் எனக் கூறி ராணியின் பெற்றோருக்கும் தெரிவிக்காமல் அழைத்துச்சென்றேன்.

அவனியாபுரம் பைபாஸ் சாலை பகுதியில் உள்ள ஒரு முட்புதருக்குள் வைத்து கிளாடிஸ் ராணியிடம் நீ கர்ப்பமாகியதற்கு நான் தான் காரணம் என பொய் சொல்லி என்னை கட்டாய திருமணம் செய்தது ஏன் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டேன். வாக்குவாதம்  முற்றவே ஆத்திரத்தில் ராணியின் கழுத்தை நெரித்து கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டேன். அங்கிருந்து ராணியின் வீட்டிற்கு வந்தேன் அவரது  பெற்றோரிடம் ராணியும் நானும் கல்லூரிக்கு சென்றதாகவும் கல்லூரியில் தனது நண்பரை பார்த்து விட்டு வருவதாக கூறிச் சென்றவர் வெகு நேரமாகியும் வரவில்லை எனவும் அவரது செல்போனை தொடர்பு கொண்டபோது செல்போன் அணைத்து வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தேன்.
ராணியின் பெற்றோருடன் சேர்ந்து ராணியை தேடுவது போல் நாடகமாடினேன்” எனப் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து இளம் பெண் காணாமல் போன வழக்கை கொலை வழக்காக மாற்றி  இந்த கொலை தனிஆளாக செய்தாரா? அல்லது வேறு நபர்கள்  கூட்டாக சேர்ந்து செய்தார்களா? என்பது குறித்து சோழவந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். காதல் திருமணம்  செய்து கொண்ட கல்லூரி மாணவி காதலனால் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் சோழவந்தான் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
thumbnail

வைகையை தொடர்ந்து மஞ்சளாறு அணை நீர் மட்டமும் உயர்வு

 தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் முல்லைப்பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் 66 அடியை எட்டியதைத் தொடர்ந்து முதல் வெள்ள அபாய எச்சரிக்கை நேற்று விடப்பட்டது. இன்று காலை நிலவரப்படி வைகை அணையின் நீர் மட்டம் 66.27 அடியாக உள்ளது. வரத்து 681 கன அடி. திறப்பு 72 கன அடி. இருப்பு 4916 மில்லியன் கன அடி.

இதே போல் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 53 அடியை எட்டியதால் கரையோர மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. புயல் காரணமாக முல்லைப் பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதியிலும், தேக்கடியிலும் தொடர் மழை பெய்தது.

இதனால் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 130.60 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 3885 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 900 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 4837 மில்லியன் கன அடியாக உள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 130 அடியை கடந்துள்ளதால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியின் முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதே வேளையில் அணையில் இருந்து தமிழக பகுதிக்கு வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் லோயர் கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தி குறைந்தது. கடந்த 16-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 83 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.

தற்போது அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதால் நேற்று 42 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது.

கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் தலையாறு அருவியில் நீர் வரத்து அதிகரித்தது. இந்த நீர் மஞ்சளாறு அணைக்கு வந்ததைத் தொடர்ந்து நீர் மட்டமும் வேகமாக உயர்ந்தது. 57 அடி உயரமுள்ள மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் கடந்த 20-ந் தேதி 51 அடியாக உயர்ந்ததைத் தொடர்ந்து முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 53.20 அடியாக உள்ளது. வரத்து 57 கன அடி. இருப்பு 399.83 மில்லியன் கன அடி.

இதனையடுத்து மஞ்சளாறு ஆற்றின் கரையோரம் வசிக்கும் தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, வத்தலக்குண்டு, சிவஞானபுரம் கிராம மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கரையோரம் உள்ள மக்கள் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என்றும் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக போடி, கொட்டக்குடி, ஊத்தாம்பாறை, நண்டலை, கூவலிங்கம் ஆகிய ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. கொட்டக்குடி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பால் பிள்ளையார் தடுப்பணையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சோத்துப்பாறை அணை ஏற்கனவே தொடர் மழை காரணமாக முழு கொள்ளளவை எட்டியது. தற்போது அணையின் நீர் மட்டம் 126.42 அடியாக உள்ளது. வரத்து 82 கன அடி. திறப்பு 3 கன அடி.

பெரியாறு 38, தேக்கடி 28.4, கூடலூர் 15.2, சண்முகா நதி அணை 9, உத்தமபாளையம் 8, வீரபாண்டி 2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. 


thumbnail

பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்

 சோழவந்தான் அருகே திருவேடகம் ஊராட்சி மன்றத்தின் சார்பில் கிராம மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் பழனியம்மாள்ஆறுமுகம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கோமதிகண்ணன், வார்டு உறுப்பினர்கள் இளங்கோவன், பஞ்சகிளி, லிங்கராணி, அழகு ரவி ஆகியோர் முன்னிலை வைத்தனர். ஒன்றிய கவுன்சிலர் வசந்தகோகிலா சரவணன் கிராம மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். விவசாய தொழிலாளர் ஒன்றிய துணை அமைப்பாளர் செல்லப்பாண்டி, ஊராட்சி மன்ற செயலாளர் சுதாபிரியா, வாடிப்பட்டி வேளாண் விற்பனை கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


thumbnail

மதுரை வழியாக செல்லும் ரெயில்கள் 16-ந்தேதி வரை ரத்து


 மதுரை கோட்ட ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் தளர்வுற்ற ஊரடங்கு அமலில் உள்ளது. எனவே மதுரை கோட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக மேலும் சில ரெயில்கள், வருகிற ஜூன் 16-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

அதன்படி வருகிற 2-ந் தேதி முதல் தாம்பரம்- நாகர்கோவில் சிறப்பு ரெயில் இரு மார்க்கங்களிலும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

ஜூன் 1-ந்தேதி முதல் திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி சிறப்பு ரெயில் இரு மார்க்கங்களிலும் வருகிற 16-ந்தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

ஜூன் 1-ந்தேதி முதல் சென்னை எழும்பூர்- ராமேசுவரம் சிறப்பு ரெயில் இரு மார்க்கங்களிலும் வருகிற 16-ந்தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

ஜூன் 1-ந்தேதி முதல் மதுரை-புனலூர் சிறப்பு ரெயில் சேவையில் திருவனந்தபுரம் -புனலூர் இடையேயான போக்குவரத்து இரு மார்க்கங்களிலும் வருகிற 16-ந் தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

ஜூன் 1ம் தேதி முதல் சென்னை எழும்பூர்- குருவாயூர் சிறப்பு ரெயில் சேவையில் திருவனந்தபுரம் - குருவாயூர் இடையேயான போக்குவரத்து பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

thumbnail

கொரோனா காலத்துக்கேற்ற பட்ஜெட் டிப்ஸ்

 காரல் மீன்

கடற்பாசிகளை மட்டும் உணவாக உட்கொண்டு வாழும் மீன்களில் பெருங்கூட்டமாக வாழ்பவவை காரல் மீன்களாகும். காரல் மீன்கள் கடலில் வாழும் மிகச்சிறிய மீன் வகைகளுள் ஒன்றாகும். இவற்றின் வெளிப்புறத்தில் செதில் இல்லாமல் உப்புப்படிமம் அதிகம் இருக்கும்.
காரல் என பொதுவாக அழைக்கப்படும் இந்த மீன் வகையானது உருவத்தில் மிகச் சிறியதாக உள்ளதால் பொடி மீன் மற்றும் காரப்பொடி மீன் என்றும் அழைக்கப்படுகிறது. மலையாள நாட்டில் இதை முள்ளான் என அழைக்கின்றனர்.
காரல் மீன்கள் "Pony fish" என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றன. முகம் மட்டக்குதிரையின் (Pony) முகம் போல் இருப்பதால் அவ்வாறு பெயர் வழங்கப்பட்டுள்ளது. சிலர் இதை Silver belly fish என்றும் அழைப்பதுண்டு.


காரல்களில் 9 இனங்களும், 48 வகைகளும் உள்ளதாக கூறப்படுகிறது.
அப்புக்காரல், அமுக்குக்காரல், கலி காரல், பொட்டுக்காரல், நெடுங்காரல் (விளக்கு), மஞ்சள் காரல், மரவுக்காரல், வரிக்காரல், வரவுக்காரல், உருவக்காரல் (குதிப்புக் காரல்), ஊசிக்காரல், ஒருவாக் காரல், பெருமுட்டிக் காரல், கவுட்டைக் காரல், நெய்க்காரல், வட்டக்காரல், கண்ணாடிக் காரல், குழிக்காரல், குல்லிக்காரல், ஓட்டுக்காரல், செவிட்டுக் காரல், சென்னிக்காரல், காணாக்காரல், காணா வரிக்காரல் (வரிக்காரலில் சிறியது), பெருவா காரல், காசிக்காரல், சுதும்பு காரல், சலப்பக் காரல், சலப்ப முள்ளுக்காரல், சளுவக் காரல், சலப்பட்டக் காரல், சிற்றுருவக் காரல் (சித்துருவக் காரல்), பஞ்சக் காரல், தீவட்டிக் காரல், கொம்புக் காரல், நாமக் காரல், பொடிக்காரல் (பூச்சிக் காரல்), பூட்டுக்காரல், முள்ளங்காரல், சுதுப்புனங் காரல், பெருவா காரல், கொடுங்காரல் என மொத்தம் 42 காரல் பெயர்களை தமிழர்கள் வகைபடுத்தியுள்ளனர்.
காரல்களில் ஒளிரும் காரல்களும் உள்ளன. உணவுக்குழாய்களில் உள்ள ஒருவகை பாக்டீரியாவின் காரணமாக காரல்கள் இரவில் ஒளிர்கின்றன. காரல்மீன்களில் மிகப்பெரிய மீனாக பெருமுட்டிக் காரலைக் கூறலாம். இந்த வகை மீன், 8 அங்குலம் முதல் 11 அங்குலம் வரை வளரக்கூடியது.
இந்தியப் பெருங்கடலில் கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து பசிபிக் கடலின் பிஜி தீவுகள் வரை இவை காணப்படுகின்றன. ஆஸ்திரேலியாவில் இருந்து ஜப்பான் வரை இவை நீந்தித் திரிகின்றன.
இவை ஆண்டின் அனைத்து நாட்களிலும் கரைப்பகுதி மற்றும் ஆழ்கடல் பகுதிகளில் வலைவீசி பிடிக்கப்படும் மீனாகும். சிறிய வகை காரல் மீன்கள் கரைப்பகுதிகளிலும் பெரிய வகை காரல் மீன்கள் ஆழ்கடல் பகுதிகளிலும் அதிகமாக காணப்படும்.
காரல் மீன்கள் தாய்மார்களுக்கு பால் ஊறும் அருமருந்தாக பயன்படுகிறது என்றால் மிகையாகாது. இதற்கு சின்ன காரல் மீனைத்தான் பயன்படுத்த வேண்டும், ஏனெனில் சதைப்பற்றுள்ள பெரிய அளவிலான காரல் மீனில் கொழுப்புச்சத்து அதிகமாக இருக்கும் என்பதால் சிறிய அளவிளான காரல் மீன்களை சேர்த்துக்கொள்வதே தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் நல்லது.
தாய்மார்களுக்கான காரல்பொடி மீன் அவியல் செய்வது எப்படி என பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
1. காரல் பொடி மீன் - 1/2 கிலோ
2. தேங்காய் - 1 மூடி
3. சின்ன சீரகம் - 1 தேக்கரண்டி
4. மிளகுதூள் - 1 தேக்கரண்டி
5. பூண்டு - 10 பல்
6. மஞ்சள்தூள் - சிறிதளவு
7. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
காரல் பொடி மீனின் தோலில் உப்புப்படிமம் அதிகமாக இருக்குமென்பதால் இரண்டு அல்லது மூன்று முறை நன்னீர் விட்டு நன்றாக கழுவ வேண்டும். வயிற்றுப்பகுதியில் உள்ள குடல் மற்றும் உணவுக்கழிவுகளை சுத்தம் செய்தால் போதுமானது. காரல் மீனின் முட்கள் கடித்து மென்றுவிடுமளவு இலகுவாகவே இருக்கும் என்பதால் முள் குறித்து பயப்பட தேவையில்லை.
முதலில் தேங்காயை நன்றாக அரைத்துக்கொள்ளவும் பின்னர் அதை ஒரு வானலியில் ஊற்றி, ஒரு குவளை அரைவைக்கு ஒன்றரை குவளை தண்ணீர் ஊற்றி சிறிதளவு மஞ்சள் தூளையும் சேர்த்து ஐந்து நிமையம் வேக விடவும். பின்னர் அரைத்து வைத்த மிளகுப்பொடி, சின்னசீரகம் மற்றும் பூண்டு கலவையை சேர்த்து நன்றாக கிண்டவும்.
கொதி வரத்தொடங்கிய பின்னர் கழுவி வைத்துள்ள காரல்பொடி மீன் மற்றும் உப்பு சேர்த்து பத்து நிமையம் மிதமான வெப்பத்தில் வேகவைத்தால் காரல் மீன் அவியல் தயார். அவரவர் சுவைக்கு ஏற்ப உப்பு மற்றும் மிளகின் அளவை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதை வடித்த சோற்றுடன் சேர்த்து சாப்பிடுவது சுவையாக இருக்கும். இதை சுவைக்காக என்றில்லாமல் உடல் நலனிற்காக அவ்வப்போது உட்கொள்வது நல்லது.
அளவில் பெரிய காரல் மீன்களை மற்ற மீன்களைப் போல் பொறித்தும் சாப்பிடலாம்.
படம் : குதிப்புக்காரல்


thumbnail

ஏழைகளின் வஞ்சிரம்

 சாளை மீன்:-
சாளை, மத்தி மற்றும் மொந்தன் என்ற பெயர்களில் அழைக்கப்படும் மீன்களானது இந்திய கடற்பகுதியில் பெருங்கூட்டமாக வாழும் மீனினம் ஆகும். சாளை மீன்கள் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது என்றால் அது மிகையாகாது.
இந்த மீன்கள் தமிழைப் போலவே மலையாளத்திலும் சாளை மற்றும் மத்தி என்றே அழைக்கப்படுகிறது. தெலுங்கில் காவாலு என்றும் பெங்காலியில் கொய்ரா என்றும் அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் Sardine மற்றும் Pilchard என்றும் அழைக்கப்படுகிறது.
வகைகள்:-
சாளை மீன்கள் அவற்றின் உருவ அமைப்பு, வண்ணம் மற்றும் சுவையினை அடிப்படையாக கொண்டு ஒழுகுச்சாளை, பூச்சாளை (தலை முதல் வால்வரை ஒரே அளவாக இருக்கும்), பேச்சாளை (சிறிய வால், எண்ணெய் நாற்றம் உள்ள மீன்), கறுப்புச்சாளை (நச்சாளை), கன்னஞ்சாளை, பறவைச் சாளை (கடலின் மேற்பரப்பில் பறக்கும்), செவிட்டுச் சாளை, மாங்காய்ச்சாளை, கீரிமீன் சாளை, தடிக்கீரிச் சாளை, கொழுவச் சாளை, கொழி சாளை, தொழுவன் சாளை, ஊசிச்சாளை, வட்டச்சாளை (சூடை) மற்றும் மேலாச் சாளை (சாளையில் பெரியது) என வகைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தை பொருத்தவரை கறுப்புச் சாளை, பேச்சாளை, வட்டச் சாளை (சூடை), கீரிமீன் சாளை மற்றும் கொழுவச்சாளைகளே அதிகம் கிடைக்கிறது.
வாழ்விடம் மற்றும் உணவு:-
சாளை மீன்கள் வங்கக்கடல் மற்றும் இந்தியப்பெருங்கடலில் பெருங்கூட்டமாக வாழும் மீனினமாகும்‌. அளவில் சிறிய சாளைகளான கறுப்புச் சாளை, பேச்சாளை, பூச்சாளை மற்றும் கன்னஞ்சாளை போன்றவை கடற்பாசிகளை உணவாக உட்கொண்டு வாழும் மீன்களாகும்.
அளவில் பெரிய சாளைகளான கொழுவச்சாளை சூடைச்சாளை மற்றும் மேலாச்சாளை போன்றவை கடற்பாசிகள் மற்றும் நெத்திலி போன்ற பொடி மீன் கூட்டங்களை வேட்டையாடி உண்ணும் மீன்களாகும்.
சிறப்புகள் :-
சாளை மீன்கள் ஏழைகளின் வஞ்சிரம் என கூறப்படுகிறது. உண்மையில் வஞ்சிர மீனை விடவும் அதிகளவிலான ஆற்றலை நம் உடலிற்கு வழங்கக்கூடியதாகும் சாளை மீன்கள்.
வஞ்சிர மீன்கள் அளவில் பெரியதாகவும் சதைப்பகுதியில் முள் இல்லாமல் இருப்பதும் உயர்வாக கருத்தப்படுவதற்கான காரணமாகும். மேலும் வஞ்சிர மீன்கள் அதிகளவில் பிடிபடாத காரணத்தினாலும் அவற்றின் சந்தை மதிப்பு அதிகம்.
ஆனால் சாளை மீன்கள் அதிகளவில் கிடைக்கும் மீனினம் ஆகும். மேலும் அளவில் சிறியதாகவும் சதைப்பகுதியில் முள் இருப்பதாலும் சாளை மீனின் மதிப்பை அறியாமல் வஞ்சிரத்துடன் ஒப்பிடுகின்றனர். உண்மையில் அதிக செலவழித்து வஞ்சிர மீனை சாப்பிடுவதை விட சாளை மீன்களை சாப்பிடுவது சுவை மற்றும் ஆற்றல் எனும் இரண்டு அடிப்படையிலும் நன்மையானதாகும்.
சாளை மீன்கள் உணவாக மட்டுமல்லாமல் மீன் எண்ணெய் எனும் மருந்து தயாரிக்கவும் பயன்படுகின்றது. இதன் எண்ணெய் தன்மையானது மனித உடலின் பல உறுப்புகளுக்கு பலவகை ஆற்றலை வழங்கக்கூடியதாகும்.
உணவுவகைகள்:-
கேரளம் மற்றும் தமிழகத்தில் இம்மீனைக்கொண்டு அவியல், குழம்பு, பொறிப்பு மற்றும் இரசம் என பலவகை உணவுகளை சமைத்து உண்பதை வழமையாக கொண்டுள்ளனர்.
சாளை மீனை சமைப்பதற்கு முன், செதிலை நீக்கி வயிற்றுப் பகுதியில் குடல் மற்றும் தலையில் உள்ள செவுள் பகுதிகளை எடுத்துவிட்டு நன்னீரில் கழுவி மேற்பகுதியில் இலகுவாக கீறி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அவியல், குழம்பு மற்றும் பொறியல் என அனைத்திற்கும் முழு மீனாகவே பயன்படுத்தலாம்.
சாளை மீன் அவியல்:-
தேவையான பொருட்கள் :-
1. சாளைமீன் - 1/2 கிலோ
2. மாங்காய் - 1
3. தக்காளி - 2
4. சின்ன வெங்காயம் - 10
5. வரமிளகாய் - 5
6. மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
7. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
8. மஞ்சள் தூள் - தேவைக்கேற்ப
9. தேங்காய் - 1/2 மூடி
10. பூண்டு - 4 பல்
11. உப்பு - தேவையான அளவு
செய்முறை :-
துருவிய 1/2 மூடி தேங்காய், பூண்டு, சீரகம், மஞ்சள் தூள் மற்றும் உரித்து வைத்த சின்னவெங்காயம் அனைத்தையும் நன்றாக மைபோல அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் வானலியில் ஊற்றிய எண்ணெய் காய்ந்ததும் வெட்டிய தக்காளி மற்றும் மாங்காய் இவற்றை போட்டு வதக்கவும். தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வந்த பின்னர் அரைத்து வைத்த தேங்காய் கலவை, மல்லித்தூள் மற்றும் மிளகாய்த்தூள் சேர்க்கவும். சில பகுதிகளில் இதனுடன் முருங்கைக்காய் சேர்ப்பதும் உண்டு.
மசாலாவின் பச்சைவாசனை மாற ஆரம்பித்தவுடன் மீனைப்போட்டு மிதமான சூட்டில் நீர் வற்றும் வரை வேக‌ வைக்கவும்.
குறிப்பு :-
மீன் சேர்த்த பின்னர் அடுப்பை கண்டிப்பாக குறைத்து விட வேண்டும். அடிபிடிக்காமல் நீர் வற்றும் வகையில் வெப்பம் இருப்பது அவசியம் இதை மனதில் வைத்தே நீரின் அளவு இருக்க வேண்டும்.
சாளை மீன் குழம்பு:-
தேவையான பொருட்கள்..
1. சாளை மீன் -1/2 கிலோ
2. தக்காளி - 3
3. சின்னவெங்காயம் - 30
4. தேங்காய் - 1/2 மூடி
5. மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
6. மல்லிதூள் - 3 தேக்கரண்டி
7. மஞ்சள்தூள் - 1/2தேக்கரண்டி
8. தாளிக்க தேவையான கடுகு , சி.சீரகம் ,வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை
9. மாங்காய் - 1
10. புளி - நெல்லிக்காய் அளவில்
11. உப்பு - தேவையான அளவு
12. தண்ணீர் - 4 குவளை
13. எண்ணெய் - 4 தேக்கரண்டி
14. பூண்டு - 8 பல்
செய்முறை
1 குவளை நீரில் நெல்லிக்காய் அளவிலான புளியை ஊறவைத்து கரைத்து அதில் 3 தக்காளியை போட்டு நன்றாக பிசைந்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
மண் சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் மற்றும் வெந்தயம் (சிலர் மிளகும் சேர்ப்பதுண்டு) சேர்த்து பொன்னிரத்தில் பொடிய விடவும். அடுத்து கறிவேப்பிலை போட்டு பொடிய விடவும். கறிவேப்பிலை பொன்னிறம் வந்ததும் புளி மற்றும் தக்காளி கரைசலை வானலியில் ஊற்றவும். அதைத்தொடர்ந்து மல்லித்தூள், மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் மூன்றையும் போடவும். தேங்காய், பூண்டு, சீரகம் மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து அரைத்த கலவையுடன் 3 குவளை தண்ணீரை சேர்த்து வானலியில் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கிண்டி விடவும்.
கொதிநிலைக்கு வந்த பின்பு நீளவாக்கில் வெட்டிய மாங்காய் துண்டுகளை அதில் போடவும்‌. ஐந்து நிமையம் கழித்து சுத்தம் செய்து வைத்த மீனை குழம்பில் சேர்த்து அடுப்பை குறைவாக வைக்கவும். நன்றாக கொதி வரும் வரை காத்திருந்து இறக்கினால் சுவையான சாளை மீன் குழம்பு தயார்.


சாளை மீன் பொறிப்பு:-
தேவையான பொருட்கள் :-
சாளை மீன் - 1/2 கிலோ
பூண்டு - 4 பல்
இஞ்சி - சிறிதளவு
மிளகு - சிறிதளவு
மிளகாய் தூள் - 20 கிராம்
மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை :-
பூண்டு, மிளகு, இஞ்சி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் தேவைக்கேற்ப உப்பு என அனைத்தையும் நன்றாக அரைத்து, நன்றாக கழுவி கீறி வைத்துள்ள சாளை மீனில் தேய்த்து அரைமணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் அவரவர் விருப்பத்திற்கேற்ப வானலியில் எண்ணெய் ஊற்றியோ அல்லது தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றியோ பொறிக்கலாம்.
அவியல் மற்றும் குழம்பினை சோறு மற்றும் இட்டலி மற்றும் தோசைக்கு சேர்த்து உண்ணலாம். வடித்து எடுத்து வைத்த பழைய சோற்றுக்கு சாளை மீன் மிகவும் சுவையாக இருக்கும்.
படம் : பேச்சாளை

thumbnail

மதுரையில் சாலையோரங்களில் பசியோடு வாடும் ஆதரவற்றவர்களுக்கு உணவளிக்கும் காவல்துறை

 மதுரையில் சாலையோரங்களில் பசியோடு வாடும் ஆதரவற்றவர்களுக்கு தினமும் மதிய உணவளிக்கும் திட்டத்தை பட்டாலியன் போலீஸார் இன்று தொடங்கினர்.



தமிழகத்தில் கரோனாவைக் கட்டுப்படுத்த தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

மதுரை நகரில் இந்த ஊரடங்கால் சாலையோரங்களில் வசிக்கும் ஆதரவற்றவர்கள் உணவின்றி தவிக்கும், சூழலைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு இலவசமாக உணவளிக்க மதுரை பட்டாலியன் போலீஸ் நிர்வாகம் ஏற்பாடு செய்தது.

தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவின்பேரில், தமிழ்நாடு சிறப்புக்காவல் படை கூடுதல் டிஜிபி ஜெயந்த்முரளி, ஐஜிக்கள் லோகநாதன், தமிழ்ச்சந்திரன் ஆலோசனையின்படி, மதுரை 6 வது பட்டாலியன் கமாண்டன்ட் இளங்கோவன் இதற்கான ஏற்பாட்டினை செய்தார்.

மதுரை கோரிப்பாளையம், பனகல் ரோடு, அண்ணா பேருந்து நிலையம் பகுதியில் சுமார் 500 பேருக்கு இன்று மதிய உணவளிக்கப்பட்டது. பட்டாலியன் ஏடிஎஸ்பி முருகேசன் உணவுப் பொட்டலங்களை வாகனத்தில் ஏற்றிச் சென்று நேரில் வழங்கினார். இதில் பட்டாலியன் காவல்துறையினரும் பங்கேற்றனர்.

மேலும் ஏடிஎஸ்பி கூறுகையில், ‘‘ முழு ஊரடங்கு நீடிக்கும் வரை, மதுரை நகரில் சாலையோர ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்க திட்டமிட்டுள்ளோம்.

ஒவ்வொரு நாளும் எங்களுக்குள் நன்கொடை பணம் வசூலித்து, நாங்களே உணவு சமைத்து, பொட்டலங்களாக தயாரித்து, வாகனங்களில் ஏற்றிச் சென்று விநியோக்க உள்ளோம்.

தினமும் வெவ்வெறு இடங்களில் சென்று சாலையோரங்களில் பசியோடு இருப்பவர்களுக்கு உணவளிக்கப்படும்,’’ என்றார்.


thumbnail

ஒரே நோயாளிக்கு கருப்பு, வெள்ளை, மஞ்சள் பூஞ்சை தொற்று அறிகுறிகள் என்ன?

 கரோனா சிகிச்சையில் இருந்து மீண்டவர்கள் இதுவரை கருப்புப் பூஞ்சை, வெள்ளைப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டார்கள் என்றுதான் அறிந்திருந்தோம், புதிதாக மஞ்சள் பூஞ்சை எனும் தொற்று உத்தரப் பிரதேசம் காஜியாபாத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

அதிலும் ஒரே நபருக்கு கருப்பு, வெள்ளை, மஞ்சள் பூஞ்சை ஆகிய மூன்று தொற்றுகளும் ஏற்பட்டுள்ளன.



காஜியாபாத்தைச் சேர்ந்த காது, மூக்கு, தொண்டை மருத்துவர் பி.பி.தியாகி அளித்த பேட்டியில் கூறுகையில், “காஜியாபாத் சஞ்சய் நகரைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க நபர் 3 விதமான பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். நாட்டிலேயே இதுதான் முதல்முறையாக இருக்கலாம், அதிர்ச்சியாகவும் இருக்கிறது. கருப்புப் பூஞ்சை, வெள்ளைப் பூஞ்சை, மற்றும் புதிதாக மஞ்சள் பூஞ்சையாலும் பாதிக்கப்பட்டுள்ளார்.

மஞ்சள் பூஞ்சை என்றால் என்ன? அறிகுறிகள்?

மஞ்சள் பூஞ்சை தொற்றின் அறிகுறிகள், உடல் சோர்வு, பசி எடுக்காமல் இருத்தல் படிப்படியாக உடல் எடை குறைதல் ஆகியவை ஆகும். உடலில் ஏற்படும் புண்களில் இருந்து சீழ் வடிதல், காயம் மெதுவாக குணமடைதல், பார்வை மங்குதல், உடல் உறுப்புகள் செயல் இழத்தல் போன்றவை தீவிரத்தன்மையைச் சுட்டிக்காட்டும்.

மஞ்சள் பூஞ்சை நோயும் உயிருக்கு ஆபத்தானது. இதன் அறிகுறிகள் வந்தவுடனே அதை கவனித்து சிகிச்சையளிக்க வேண்டும். பலரும் இதன் அறிகுறி தெரியாமல் நோய் முற்றியபின்புதான் சிகிச்சைக்கு வருகிறார்கள். இந்த நோய்க்கு ஆம்போடெரசின்-பி மருந்து செலுத்த வேண்டும்.

வ்வாறு பாதுகாப்பது ?

முடிந்தவரை நம்முடைய வீட்டைச் சுத்தமாக வைத்திருத்தல், பழைய உணவுகளைப் பயன்படுத்தாமல் இருத்தல், ஈரப்பதம் இல்லாமல் இடங்களைப் பாதுகாத்தல் போன்றவை பாக்டீரியா, பூஞ்சை வளராமல் தடுக்க முடியும்.

வீட்டில் உள்ள ஈரப்பதத்தை முக்கியமாக அளவிட வேண்டும். வீட்டில் அதிகமான ஈரப்பதம் இருப்பது, பூஞ்சை, பாக்டீரியா வளர்வதற்கு ஏதுவான சூழலை உருவாக்கிவிடும். கருப்பு, வெள்ளை பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்கள் மஞ்சள் பூஞ்சை நோய் வரவிடாமல் தற்காக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

நோயாளியின் உறவினர் சொல்வது என்ன?

3 பூஞ்சை தொற்றாலும் பாதிக்கப்பட்ட நோயாளியை கவனித்துக் கொள்ளும் நபர் கூறுகையில், “கரோனாவால் குணமடைந்தபின் கடந்த 4 நாட்களாக நோயாளியின் ஒரு பக்க முகத்தில் வீக்கம் காணப்படுகிறது. கண்களைத் திறக்க முடியவில்லை.

மூக்கில் ரத்தம் வழிகிறது, சிறுநீர் கழிக்கும்போது ரத்தம் சேர்ந்து செல்கிறது. இதையடுத்து மருத்துவமனையில் சேர்த்தபோது அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் மஞ்சள் பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்தனர்” என்றார்.


thumbnail

கோவில்கள் மூடல்: இந்த ஆண்டும் களையிழந்த வைகாசி விசாகம்

 வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திர நாள், முருகப் பெருமான் அவதரித்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதனை வேனில் விழா என்றும் கூறுவர்.




முருகன் கோவில்களில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனோ பரவல் காரணமாக வைகாசி விசாக திருவிழா பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்றது. இந்த ஆண்டும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வைகாசி விசாக திருவிழா நடைபெறுமா என்று பக்தர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கோவிலில் பக்தர்கள் வழிபாடு செய்வதற்கு அரசு தடை விதித்துள்ளது. எனவே இன்று(செவ்வாய்க்கிழமை) அனைத்து முருகன் கோவிலில் வைகாசி விசாக விழா எளிமையாக நடைபெறுகிறது.

மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. இதையடுத்து முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கிறார். கொரோனா பரவல் காரணமாக இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை. பூஜைகளில் கோவில் சிவாச்சாரியார்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

விசாகம், வைகாசி, அனிலநாள், சோதிநாள் எனவும்படும். இருபத்தேழு நட்சத்திரங்களில் விசாகமும் ஒன்று. சூரபதுமன் முதலான அசுரர்களின் கொடுமைகளைத் தாங்கலாற்றாத தேவர்கள் சிவபெருமானிடம் சென்று தமது குறைகளை முறையிட்டனர். கருணையங்கடலாகிய சிவபிரான் அசுரர்களுடைய கொடுமைகளினின்று அவர்களைக் காத்தருள விரும்பினார்.

தமது நெற்றிக்கண்ணின்றும் ஆறு தீப்பொறிகளைத் தோற்றுவித்தார். அவ்வாறு பொறிகளும் வாயு, அக்கினி, தேவர்களினால் கங்கையில் கொண்டு விடப்பட்டன. கங்கை சரவணப் பொய்கையில் கொண்டு சேர்த்தது. சரவணப் பூந்தடாகத்திலே ஆறு பொறிகளும் ஆறு திருக்குழந்தைகளாகி விளங்கின. விஷ்ணுமூர்த்தி கார்த்திகை முதலிய கன்னியர்கள் மூலமாக அக்குழந்தைகட்குப் பாலூட்டுவித்தார். ஆறு பொறிகளும் திருக்குழந்தைகளான தினம் வைகாசிமாதத்து விசாகநாள் ஆகும்.

ஆறுமுகப்பெருமான் அவதரித்த தினமாதலின் விசாகம் விசேஷ தினமாகக் கொண்டாடப்படுகின்றது. எனவே, உலகத்து உயிர்கள் யாவும் உய்யும் பொருட்டு எம்பிரானே தந்திருவிளையாடலாற் குழந்தையான நாளாதலின் சைவமக்கள் வழிபாட்டிற்கு இந்நாள் மிகவும் சிறந்ததாகும். இத்தினத்தில் கோயில்களில் வசந்தோற்சவமும், பிரமோற்சவமும் நடைபெறும், இத்தினம் பலசமயத்தாருக்கும் ஒரு புனித நாளாகும்.வைணவத்தில் நம்மாழ்வார் அவதார நாளாகவும் இந்நாள் கொண்டாடப்படுகின்றது. இந்நாளில் திருசெந்தூரில் மிகவும் சிறப்பான வழிபாடு நடக்கும். புத்தன் (சித்தார்த்தன்) அவதரித்ததும்(பிறப்பு) புத்தாரனதும், (திருவருள்) நிருவாணமடைந்ததும்(மறைவு) இதே திதியிற்தான் என்பர்.

thumbnail

ராஜீவ் கொலை குற்றவாளிகளை மன்னிக்க மாட்டோம்: முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆவேசம்

 புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-



புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தேவையான ஆக்சிஜன் படுக்கைகள், வெண்டிலேட்டர்கள் இல்லை.

அதற்கான கட்டமைப்பை குறுகிய காலத்தில் உருவாக்காமல் இருந்ததால் பலர் உயிரிழந்துள்ளனர். போர்க்கால அடிப்படையில் வெண்டிலேட்டர், ஆக்சிஜன் படுக்கைகளை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜிப்மரில் குறைந்தபட்சம் 1000 படுக்கைகளும், அதில் 70 சதவீதம் ஆக்சிஜன் படுக்கைகளாகவும், 30 சதவீதம் வெண்டிலேட்டர் படுக்கைகளாகவும் அமைத்தால் தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்.

அதேபோல், இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் 700 ஆக்சிஜன் மற்றும் வெண்டிலேட்டர் படுக்கைகளை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள படுக்கைகளில் 75 சதவீதத்தை மாநில அரசு கையகப்படுத்தி, அதன் மூலம் ஆக்சிஜன், வெண்டிலேட்டர் படுக்கைகளை அதிகரிக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற முடியும்.

புதுவையில் முழு ஊரடங்கை மாநில அரசு கடுமையாக கடைபிடிக்கவில்லை. 12 மணிக்கு மேல் மக்கள் தாராளமாக வெளியே உலவுகின்றனர். அவர்களை கேட்க ஆளில்லை. ஊரடங்கிலும் மக்கள் நடமாடுவதால் கொரோனா தொற்று குறையவில்லை. எனவே, கடுமையான முறையில் ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.

புதுவையில் அமைப்பு சாரா தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், கூலி தொழிலாளர்கள் உட்பட பல லட்சம் பேர் வேலையில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அரசு அறிவித்த 5 கிலோ அரிசியை கொடுத்துவிட்டால் மட்டும் போதாது. தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு ரூ.4 ஆயிரம் நிவாரணம் அறிவித்து கொடுக்கிறார். அதேபோல், புதுவையில் வசதியுள்ளவர்கள், அரசு ஊழியர்கள் தவிர்த்து ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

ராஜீவ் காந்தியை கொன்றவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. தற்போது அவர்கள் சிறையில் இருக்கிறார்கள். அவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யலாம் என சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பெருந்தன்மையோடு கூறி உள்ளனர்.

ஆனால், ராஜீவ் காந்தியின் இழப்பு நாட்டிற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் பேரிழப்பு. அவரை கொன்றவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது. அது சில அரசியல் கட்சி மற்றும் பொது நலவாதிகளின் கருத்தாக இருக்கலாம்.

ஆனால், காங், தொண்டன் என்ற முறையில் தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவித்தாக வேண்டும். அவர்களை நாங்கள் மன்னிக்க மாட்டோம். இது மன்னிக்க முடியாத குற்றம். அவர்கள் நீதிமன்ற தீர்ப்பை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு நாராயணசாமி கூறியுள்ளார்.

thumbnail

இ-அடங்கல் செயலியை பயன்படுத்த வேண்டுகோள்

 விவசாயிகள் இ-அடங்கல் செயலியைப் பயன்படுத்தி பயிர் குறித்த விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று வேளாண்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளின் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது.இங்கு தென்னை, வாழை, மா, கரும்பு, நெல், மக்காச்சோளம், காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து விதமான பயிர்களும் பயிரிடப்படுகிறது.ஒரு பகுதியில் விவசாய நிலங்கள் எவ்வளவு உள்ளது, என்னென்ன பயிர்கள் எவ்வளவு நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ளது உள்ளிட்ட ஆவணங்கள் வருவாய் துறையினரால் பராமரிக்கப்படுகிறது.

இதற்கென ஒவ்வொரு விவசாயி குறித்த விவரங்களும் அடங்கலில் பதிவு செய்யப்படுகிறது.இவ்வாறு பதிவு செய்வதற்கு விவசாயிகள் நேரம் ஒதுக்கி கிராம நிர்வாக அலுவலரிடம் மனு செய்து அடங்கலில் பதிவு செய்ய வேண்டிய நிலை இருந்தது.
  
இதனால் பல விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள பயிர்கள் குறித்த விவரங்களை அடங்கலில் பதிவு செய்வதில் ஆர்வம் காட்டவில்லை.இது அரசின் திட்டங்கள் விவசாயிகளை சென்றடைவதில் இடர்பாடுகளை ஏற்படுத்தும் என்பதை விவசாயிகள் உணரவில்லை.
உதாரணமாக உடுமலை பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படும் நிலையில் பல விவசாயிகளும் இதுகுறித்த விவரங்களை அடங்கலில் பதிவு செய்வதில்லை. இதனால் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்குவதற்காக மிகக்குறைந்த அளவிலேயே சின்ன வெங்காய விதைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இதுபோன்ற சூழலை தவிர்க்கவும் முழுமையான சாகுபடி பரப்பளவை அறிந்து கொள்ளவும் விவசாயிகளே எளிய முறையில் அடங்கலில் பதிவு செய்து கொள்ளும் வகையில் இ-அடங்கல் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து வேளாண்துறையினர் கூறியதாவது:-

வருவாய் கிராமத்தில் உள்ள அனைத்து சர்வே எண்களின் விவரம், நில உரிமையாளர் பெயர், பட்டா எண், நில மதிப்பீடு மற்றும் வேளாண் பயிர்கள் தொடர்பான விவரங்கள் அனைத்தும் இந்த செயலியில் பதிவு செய்யப்பட்டிருக்கும்.



விவசாயிகளே தங்கள் மொபைல் போனிலிருந்து இ-அடங்கல் செயலியை பயன்படுத்தி தங்கள் நில விவரம், பயிர் விவரம் போன்றவற்றைப் பதிவு செய்ய முடியும்.மேலும் ஆன்லைன் மூலமாகவே தங்கள் அடங்கல் சான்றுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு சுமார் 2 ஆண்டுகள் ஆன நிலையிலும் விவசாயிகள் அதிக அளவில் இந்த செயலியைப் பயன்படுத்தவில்லை. தற்போதுள்ள இக்கட்டான சூழலில் உணவு தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் விவசாயப் பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.எனவே இந்த சூழலில் விவசாயிகள் இ-அடங்கல் செயலியைப் பயன்படுத்தி பயிர் விவரங்களைப்பதிவு செய்வது கொள்வதன் மூலம் அரசின் உதவிகள் முழுமையாகக் கிடைக்க வழி கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
thumbnail

மூச்சுத்திணறலால் அவதிப்பட்டவரை சரக்கு வாகனத்தில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்த அவலம்

 மதுரை பாலமேடு அருகே உள்ள மூடுவார்பட்டி பகுதியை சேர்ந்த 31 வயதுடைய வாலிபர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருந்தது. இதனைத் தொடர்ந்து அவர் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதற்கிடைய அந்த நபருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தொடர்புகொண்ட போது, ஆம்புலன்ஸ் மற்றொருவரை அழைத்துச் சென்று இருப்பதால் வர சற்று தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதனை தொடர்ந்து அந்த கிராமத்தில் இருந்த ஒருவரின் சரக்கு வாகனத்தை எடுத்து, அதன் பின்பகுதியில் அந்த வாலிபரை படுக்க வைத்து சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அவர் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவர் சரக்கு வாகனத்தில் படுக்க வைத்து அழைத்து வரப்பட்ட காட்சிகள் சமூக வலைத்தங்களில் பரவின.

thumbnail

ரஷ்யா, ஈரான், அர்மேனியாவுடன் தொடர்புடைய நூற்றுக்கணக்கான கணக்குகள் நீக்கம்: ட்விட்டர் அறிவிப்பு

 ரஷ்யா, ஈரான், அர்மேனியாவுடன் தொடர்புடைய நூற்றுக்கணக்கான ட்விட்டர் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவனத்தின் வலைப்பூ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''ட்விட்டர் கொள்கைகளை மீறிய காரணத்துக்காக ஈரானில் இருந்து செயல்பட்டு வந்த 238 கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன. நேட்டோ படைகள் குறித்த தகவல்களைப் பரப்பிய காரணத்துக்காகவும் அமெரிக்காவையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் குறிவைத்துப் பதிவிட்ட காரணத்தாலும் ரஷ்ய நாட்டில் இருந்த 100 கணக்குகளை நீக்கியுள்ளோம்.




அதேபோல அஸர்பைஜான் நாட்டைக் குறிவைத்துப் பதிவுகளைப் பரப்பிய அர்மேனிய நாட்டைச் சேர்ந்த 35 கணக்குகளும் நீக்கப்பட்டுள்ளன.

ட்விட்டர் நிறுவனத்தின் கொள்கைகளை மீறிச் செயல்பட்டதை அடுத்து சுமார் 373 கணக்குகள் ட்விட்டர் பக்கத்தில் இருந்து நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளன'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், போராட்டத்துக்கு ஆதரவாகவும் கருத்துகளைத் தெரிவித்து வந்த போலியான முகவரி கொண்ட 250 ட்விட்டர் கணக்குகள், மத்தியத் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டதன் பேரில் ட்விட்டர் சார்பில் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

About

Ad Code

Responsive Advertisement

Our Artworks

Categories

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's.

Subscribe Us

Popular Posts

Popular Posts

Popular Posts